வெளிநாடு சென்ற 1,285 பேர் மாயம்; சைபர் குற்றவாளி ஆனார்களா?
வெளிநாடு சென்ற 1,285 பேர் மாயம்; சைபர் குற்றவாளி ஆனார்களா?
ADDED : ஏப் 30, 2025 02:25 AM

சென்னை: 'தமிழகத்தில் இருந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு அனுப்பப்பட்ட, 1,285 பேர் நாடு திரும்பாததால், சைபர் குற்றவாளிகளாக மாற்றப்பட்டனரா' என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் உரிமம் பெற்றது போல, வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும், போலி ஏஜன்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
முக்கோண நாடுகள்
இவற்றின் வாயிலாக, லாவோஸ், கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஆட்கள் அனுப்பப்படுகின்றனர்.
அவ்வாறு அனுப்பப்படும் நபர்கள், சைபர் குற்றங்களில் ஈடுபடும் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். பட்டினி போட்டு, உடலில் மின்சாரம் பாய்ச்சி, கொடுமைப் படுத்துகின்றனர் என்று புகார்கள் வந்துள்ளன. இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
தங்க முக்கோண நாடுகள் என அழைக்கப்படும், மியான்மர், கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு, தமிழகத்தில் இருந்து போலி ஏஜன்டுகள் வாயிலாக அழைத்து செல்லப்பட்ட, 1,285 பேர் என்னவாயினர் என்பதே தெரியாமல் உள்ளது.
அவர்கள் நாடு திரும்பாமல் இருப்பதால், ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும், சைபர் குற்றவாளிகளாக மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுகிறது.
இதுகுறித்து விசாரித்து வருகிறோம். அந்நாடுகளில் இருந்து திரும்பிய, 326 பயணியரிடம் விசாரித்தோம்.
ஆறு பேர் கைது
அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், போலி ஏஜன்டுகளாக செயல்பட்ட, மலேஷிய நாட்டை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக செயல்பட்ட, 50 போலி ஏஜன்ட் அலுவலகங்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சைபர் குற்றவாளிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கிய, தமிழகத்தை சேர்ந்த ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.