ஒரு லட்சத்தில் 13 குழந்தைகள் சென்னையில் புற்றுநோயால் பாதிப்பு
ஒரு லட்சத்தில் 13 குழந்தைகள் சென்னையில் புற்றுநோயால் பாதிப்பு
ADDED : பிப் 01, 2025 05:56 AM

சென்னை: சென்னையில் ஒரு லட்சத்தில், 13 குழந்தைகளுக்கு, புதிதாக புற்றுநோய் பாதிப்பு, 2022ல் கண்டறியப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் புற்றுநோய் தரவு சேகரிக்கப்பட்டது. அதன் ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் கூறியிருப்பதாவது:
குழந்தைகளுக்கென பிரத்யேக பதிவேடு நடைமுறை, 2022ல் துவங்கப்பட்டது. அதன் கீழ், 19 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் பாதிப்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
சென்னையில், 17 மருத்துவமனைகளில் இருந்து தகவல்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்காணித்தும் பதிவேடு தயாரிக்கப்பட்டது.
அதன்படி, 2022ம் ஆண்டில், புதிதாக, 241 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானது தெரிய வந்தது. அதில், 139 ஆண் குழந்தைகள், 102 பெண் குழந்தைகள்.
இவர்களில், ரத்தம் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். அதைத் தொடர்ந்து நிணநீர் மண்டல புற்றுநோய், சார்கோமா எனப்படும் மென் திசு புற்றுநோய், எலும்பு புற்றுநோய் ஆகியவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கணக்கின்படி, சென்னை மக்கள் தொகையில், ஒரு லட்சத்தில், 13 குழந்தைகளுக்கு, 2022ல் புற்றுநோய் இருந்தது.
புற்றுநோய் பாதித்த 170 பேரின் மருத்துவ ஆவணங்கள், தரவுகள் மேம்பட்ட நிலையிலும், துல்லியமாகவும் இருந்தன. அவர்களில், 71 சதவீத குழந்தைகள், தற்போதும் உயிருடன் உள்ளனர். உயிருடன் இருப்பவர்களில், 81 சதவீதம் பேர் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.