அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; காவலாளி கைது
அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; காவலாளி கைது
ADDED : ஜூன் 10, 2025 04:09 AM

சென்னை: அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்து வரும் சிறுமியை, பாலியல் வன்முறை செய்த விவகாரத்தில், அங்கு, 14 ஆண்டுகளாக பணியாற்றிய காவலாளியை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியத்தில், தமிழக சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு சேவை இல்லம் உள்ளது. இங்கு, பல மாவட்டங்களை சேர்ந்த 130 மாணவியர் தங்கி, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, 13 வயது சிறுமி, நான்கு நாட்களுக்கு முன், இந்த சேவை இல்லத்தில் சேர்ந்துள்ளார்; குரோம்பேட்டை பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அலறல் சத்தம்
நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில், மாணவி எழுந்து வெளியே வந்தபோது, மர்ம நபர் மாணவி முகத்தில் கைவைத்து அழுத்தி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி தொடர்ந்து போராடிய நிலையில், அம்மாணவிக்கு முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், வலது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. தொடர்ந்து போராடிய மாணவி, வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதால், அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக மாணவியர், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அறுவை சிகிச்சை
எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இதற்கிடையே, சம்பவம் குறித்து, சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
சேவை இல்லத்தில் உள்ள, 'சிசிடிவி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்தனர். 14 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றும், சிட்லபாக்கம் பெரியார் நகரை சேர்ந்த மேத்யூ, 50, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
அரசு சேவை இல்ல சுற்றுச்சுவரின் உயரம் 10 அடி என்பதால், வெளியாட்கள் யாரும் ஏறி குதித்து உள்ளே வருவதற்கு வாய்ப்பு குறைவு. அதேபோல, நுழைவாயிலில் காவலாளி பணியில் இருப்பதால், அந்த வழியாகவும் வெளியாட்கள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை.
எனவேதான், காவலாளி மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட மாணவி, நான்கு நாட்களுக்கு முன்தான் வந்துள்ளார் என்பதால், வெளியில் எதையும் கூற மாட்டார் என்று எண்ணி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோல, வேறு யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும், மேத்யூவின் தாய், இந்த சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், கருணை அடிப்படையில், 2011ல், மேத்யூவிற்கு காவலாளி பணி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.