ADDED : ஜூன் 14, 2026 06:09 AM

சென்னை: தமிழகம் முழுதும், மீண்டும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளில், 1,328 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க தீவிர நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
அதன்படி, மே 28ம் தேதி முதல், இம்மாதம் 10ம் தேதி வரை மாநிலம் முழுதும் உள்ள, 36,740 குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர்.
அவர்களில் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட, 1,328 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
மேலும், 2,939 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
தலைமறைவாக இருக்கும் அக்குற்றவாளிகளை கைது செய்ய, போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பல்வேறு இடங்களில், அமலாக்க குழுக்கள் வாயிலாக, 231 கிலோ கஞ்சா, 4,073 போதை மாத்திரைகள், 22.55 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 0.6 கிராம் எம்.டி.எம்.ஏ., 362.5 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அது தொடர்பாக, 202 பேர் கைது செய்யப்பட்டு, 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
