2 வாரத்தில் 134 மின் திருட்டு கண்டுபிடிப்பு; ரூ.1.23 கோடி அபராதம் வசூல்
2 வாரத்தில் 134 மின் திருட்டு கண்டுபிடிப்பு; ரூ.1.23 கோடி அபராதம் வசூல்
ADDED : மார் 27, 2025 05:15 AM

சென்னை : தமிழகத்தில் கடந்த இரு வாரத்தில், 134 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஈடுபட்டவர்களிடம், 1.23 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் திருட்டை தடுக்கும் பணியில், மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம், 5ம் தேதி சென்னை மண்டல அதிகாரிகள், வட சென்னை பகுதிகளில் மின் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்ததில், 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, 15.68 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இம்மாதம், 4, 5, 6, 7 ஆகிய நாட்களில், திருச்சி மண்டல அதிகாரிகள், கடலுார், விழுப்புரத்தில் ஆய்வு செய்து, 60 மின் திருட்டுகளை கண்டுபிடித்தனர்.
கோவை தெற்கு, பல்லடம், தர்மபுரி, உடுமலைப்பேட்டையில், 6ம் தேதி நடந்த ஆய்வில், 14 மின் திருட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு, 15.10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடியில், 6, 7ம் தேதிகளில் நடந்த ஆய்வுகளில், 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 9 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, விருது நகர், துாத்துக்குடியில், 14, 15 ஆகிய தேதிகளில் நடந்த ஆய்வில், 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 18.61 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.