ADDED : பிப் 25, 2026 03:57 AM
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில், கடலாமைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பொதுவாக, ஜன., முதல் ஏப்., மாதம் வரை, அவை கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். இவ்வாறு வரும் கடலாமைகள் இறந்து விடுவது, சமீபத்தில் சர்ச்சையானது. இதையடுத்து கடலாமைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை, வனத்துறை முடுக்கி விட்டுள்ளது.
இது தொடர்பாக, வனத்துறை செயலர் சுப்ரியாசாஹு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில், 10 மாவட்டங்களில், 49 இடங்களில், கடலாமை முட்டை பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், தற்போது வரை, 1,35 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 477 கடலாமை குஞ்சுகள், பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, எட்டு கடலாமைகளுக்கு, டெலிமேட்ரி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 'கயல்' என பெயரிடப்பட்ட கடலாமை, முதல்முறை முட்டையிட வந்தபோது, 'டெலிமேட்ரி' கருவி பொருத்தப்பட்டது. இது, மூன்று முறை சென்னை கடற்கரை பகுதிக்கு வந்து, மொத்தம், 389 முட்டைகள் இட்டுள்ளது .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

