வாக்காளர் சிறப்பு முகாம்களில் 14 லட்சம் விண்ணப்பங்கள்
வாக்காளர் சிறப்பு முகாம்களில் 14 லட்சம் விண்ணப்பங்கள்
ADDED : நவ 24, 2024 11:59 PM

சென்னை: நான்கு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில், 14 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 17, 18ம் தேதிகளிலும், 23, 24ம் தேதிகளிலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
குழப்பம்
சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்றைய முகாமில், சில இடங்களில் முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் பெறுவதில் குழப்பம் ஏற்பட்டது.
ஏற்கனவே ஓட்டளித்த ஓட்டுச்சாவடிக்கு சென்ற போது, புதிய முகவரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் விண்ணப்பம் அளிக்கும்படி கூறினர்.
அங்கு சென்றால், ஏற்கனவே இருந்த ஓட்டுச்சாவடியில் விண்ணப்பம் அளியுங்கள் என அங்கிருந்தவர்கள் கூற, விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்தனர்.
நேற்று கடைசி முகாம் என்பதால், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், கூட்டம் அதிகம் இருந்தது. கடந்த 17, 18ம் தேதி நடந்த முகாம்களில் மொத்தம், 6 லட்சத்து, 85,513 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கள ஆய்வு
இவற்றில், 4 லட்சத்து, 42,035 விண்ணப்பங்கள் பெயர் சேர்ப்பதற்காக வந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக நடந்த முகாமில், 7 லட்சத்து, 15,102 விண்ணப்பங்கள் பெறப்பட்டுஉள்ளன.
நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் மொத்தம், 14 லட்சத்து, 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பின் தகுதியான நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். நீக்க வேண்டியவர்கள் பெயர் நீக்கப்படும். முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் விண்ணப்பம் கொடுக்க முடியாதவர்கள், https://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும், 'VOTER HELP LINE' மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.