UPDATED : ஆக 14, 2024 10:33 AM
ADDED : ஆக 13, 2024 11:15 PM

சென்னை: தமிழகத்தில், 44,125 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட உள்ள, 15 புதிய தொழில் திட்டங்களுக்கு, அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், நீர்மின் உற்பத்திக்கான மூன்று புதிய கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டது.
தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது. தொழில்துறை, உயர்கல்வித் துறை, மின்துறை தொடர்பான பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பகல் 11:50 மணிக்கு கூட்டம் நிறைவடைந்ததும், அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அமைச்சர்களுடன் மட்டும் அரை மணி நேரம், முதல்வர் தனி ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவை கூட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அளித்த பேட்டி: அமைச்சரவை கூட்டத்தில், 44,125 கோடி ரூபாய் முதலீட்டில், 15 நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் வழியாக, 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள், பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்களில் முதலீடுகள் வந்துள்ளன.
துாத்துக்குடி மாவட்டத்தில், 'செம்ப்கார்ப்' நிறுவனம் 21,040 கோடி ரூபாய் முதலீட்டில், 1,114 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது
காஞ்சிபுரத்தில், 'மதர்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், 2,600 கோடி ரூபாய் முதலீட்டில், 2,100 பேருக்கு வேலை அளிக்கும் திட்டம்
ஈரோட்டில் 'மில்கி மிஸ்ட்' நிறுவனம் 1,777 கோடி ரூபாய் முதலீட்டில் 2,025 பேருக்கு வேலை அளிக்கும் திட்டம்
கிருஷ்ணகிரியில், 'லோகன் கிரீன்டெக்' நிறுவனம் 1,597 கோடி ரூபாய் முதலீட்டில், 715 பேருக்கு வேலை அளிக்கும் திட்டம்
ஆகிய முக்கியமான திட்டங்கள் தவிர, உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. யு.பி.எஸ்., மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவன விரிவாக்கத்திற்கு ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக, தமிழகத்தின் சிப்காட் நிறுவனம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் வடகால் பகுதியில், 706 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்கும் விடுதியை, வரும் 17ம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
இதுதவிர, தமிழ்நாடு நீரேற்று புனல்மின் திட்டம், தமிழ்நாடு சிறு புனல்மின் திட்டங்கள், தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்திக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு என, மூன்று கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பரவலாக்கப்பட்ட வளர்ச்சியில், முதல்வர் உறுதியாக உள்ளார். தமிழகம் முழுதும் திட்டங்களை கொண்டு வருவது அவரது நோக்கம். முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.