1.50 லட்சம் பேர் 2 வங்கிகளில் பயிர் கடன் வாங்கியது அம்பலம்
1.50 லட்சம் பேர் 2 வங்கிகளில் பயிர் கடன் வாங்கியது அம்பலம்
ADDED : ஜூலை 29, 2025 04:53 AM

சென்னை: வட்டி மானிய சலுகைக்காக, 1.50 லட்சம் விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் கடன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன் வழங்கப்படுகின்றன.
கடனை குறித்த காலத்தில் செலுத்திவிட்டால், 7 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. மத்திய அரசு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்குகிறது.
சில விவசாயிகள் வட்டி சலுகைக்காக, கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, வணிக வங்கிகளிலும் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன் பெறுகின்றனர். இதனால், சங்கங்களுக்கு மத்திய அரசின் வட்டி மானியம் கிடைப்பதில்லை.
கடந்த ஆண்டில், 1.50 லட்சம் வட்டி சலுகைக்காக, கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில், கடன் பெற்றுள்ள விபரத்தை, கூட்டுறவு துறை கண்டறிந்துள்ளது.
எனவே, அந்த விவசாயிகளுக்கு மட்டும், இதர வங்கிகளில் கடன் பெற்றுள்ளனரா என்பதை, 'சிபிள் ஸ்டேட்மென்ட்' பெற்று உறுதி செய்த பின், கடன் வழங்குமாறு சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதர விவசாயிகளுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே பின்பற்றியபடி வணிக வங்கிகளிடம் இருந்து, தடையில்லா சான்று அல்லது சுயசான்று பெற்று, கடன் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

