கம்போடியா கும்பலின் 1.50 கோடி அழைப்புகள்; ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் தடுத்து நிறுத்தம்
கம்போடியா கும்பலின் 1.50 கோடி அழைப்புகள்; ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் தடுத்து நிறுத்தம்
ADDED : நவ 19, 2024 03:27 AM

சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வாயிலாக, லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, தமிழகத்தில் பணமோசடி செய்ய முயற்சி செய்து வந்த, 1.50 கோடி மொபைல் போன் அழைப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அடிப்படை கணினி அறிவு, தட்டச்சு, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர்களை குறிவைத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக இடைத்தரகர்கள் மற்றும் சட்ட விரோதமாக ஆள் சேர்க்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரங்களை வெளியிடுகின்றன.
இவற்றை நம்பி ஏமாறுவோர், சுற்றுலா விசாவில் தாய்லாந்து வழியாக கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர்.
இவ்வாறு, தமிழகம் உட்பட இந்தியா முழுதும் கடத்தப்பட்ட இளைஞர்கள், அந்நாடுகளில் ஆன்லைன் வாயிலாக பணமோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளாக மாற்றப்படுகின்றனர்.
எந்த மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளனரோ, அவர்களின் சொந்த மாநில மக்களிடமே பணமோசடி செய்ய வேண்டும். சைபர் குற்றவாளிகளாக மாற முடியாது என்று மறுத்தால், அவர்களை பட்டினி போட்டு கொடுமைப்படுத்துவது, உடலில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்வது, பெல்டால் அடிப்பது போன்ற கொடுமைகளை மர்ம கும்பல்கள் செய்கின்றன.
அந்த வகையில், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டவர்கள் வாயிலாக, 14 மாதங்களில் இந்தியா முழுதும், 10,188 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துவோர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்; கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகம் சார்பில், பணமோசடிக்கு முயற்சி செய்து, லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மொபைல் போன் அழைப்புகளை தடுக்கும் முயற்சி நடக்கிறது. இதுபற்றி, அத்தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறியதாவது:
ஆன்லைன் வாயிலாக பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மற்றும் மோசடிக்கு முயற்சி செய்தவர்களின் மொபைல் போன் எண்கள் எங்களிடம் உள்ளன. மற்ற மாநிலங்களில், மோசடி செய்த நபர்களின் விபரங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். அவர்களில், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பேசியவர்களின் மொபைல் போன் எண்களும் உள்ளன. அவற்றை எல்லாம், மத்திய தொலை தொடர்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்.
அவர்கள் லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பணமோசடிக்கு முயற்சி செய்து, தமிழகத்திற்கு வந்த 1.50 கோடி மொபைல் போன் அழைப்புகளை, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வாயிலாக, 15 நாட்களில் தடுத்து நிறுத்தி உள்ளனர். அழைப்பு வந்த சிம்கார்டுகள் யாருடையது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தற்போது, லாவோஸ், கம்போடியாவில் இருந்து வரும் அழைப்புகள் குறைந்து விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.