16 டன் கொட்டைப்பாக்கு; மதிப்பு 1.25 கோடி ரூபாய்; மலேசியாவில் இருந்து கடத்திய இருவர் கைது!
16 டன் கொட்டைப்பாக்கு; மதிப்பு 1.25 கோடி ரூபாய்; மலேசியாவில் இருந்து கடத்திய இருவர் கைது!
ADDED : ஜன 12, 2025 09:51 PM

துாத்துக்குடி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ரூ. 1.25 கோடி மதிப்புள்ள 16 டன் கொட்டைப்பாக்கை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் பாக்கு மரங்கள் அதிகம் உள்ளன. அவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நலன் கருதி, வெளிநாடுகளில் இருந்து கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்யும்போது, மத்திய அரசு 100 சதவீதம் வரி விதிக்கிறது.
எனினும், சட்ட விரோதமாக கொட்டைப்பாக்கை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தொடர்ந்து நடப்பதாக புகார்கள் வந்தன. கொட்டைப்பாக்கு என்று கூறாமல், வெவ்வேறு வகையான பொருட்கள் என்று கூறி, கப்பல்களில் கொண்டு வந்து இறக்குமதி செய்வதாக, தகவல்கள் கிடைத்தன.
துாத்துக்குடி துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட கன்டெய்னரில் கூலிங் ஷீட் இருப்பதாக, விவரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சந்தேகத்தின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கன்டெய்னரை திறந்து ஆய்வு செய்தனர்.
இதில், ரூ.1.25 கோடி மதிப்புள்ள 16 டன் கொட்டைப்பாக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன் இவ்வாறு சட்ட விரோதமாக கொட்டைப்பாக்கு கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து துாத்துக்குடியை சேர்ந்த அய்யனார், வில்லியம் பிரேம் குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.