பள்ளி திறந்த நேரத்தில் 176 சிறைக்காவலர்கள் இடமாற்றம் குடும்பத்தினர் திண்டாட்டம்
பள்ளி திறந்த நேரத்தில் 176 சிறைக்காவலர்கள் இடமாற்றம் குடும்பத்தினர் திண்டாட்டம்
UPDATED : ஜூன் 04, 2025 04:13 AM
ADDED : ஜூன் 04, 2025 12:30 AM

மதுரை:தமிழகத்தில் ஒரே நேரத்தில் 176 தலைமை சிறைக் காவலர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். பள்ளி திறந்த நேரத்தில் இடமாற்றப்பட்டுள்ளதால் வெளியூருக்கு குடும்பத்துடன் இடமாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் 'பேச்சிலராக' மாறி வருகின்றனர்.
ஒன்பது மத்திய சிறைகள், அதன்கீழ் உள்ள மாவட்ட, கிளை சிறைகளில் நீண்டகாலமாக பணியாற்றுவோரை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் இடமாற்றி வருகிறார். இரு மாதங்களுக்கு முன் உதவி ஜெயிலர்கள் இடமாற்றப்பட்டனர். அவர்களின் பிள்ளைகள் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள், கல்லுாரிகளில் படிப்பவர்களாக இருந்ததால் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு பல நுாறு கி.மீ., தாண்டி 'பேச்சிலராக' பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை காவலர்கள் 176 பேர் மே 27 ல் இடமாற்றப்பட்டனர். இதில் பலரின் பிள்ளைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திய நிலையில் இடமாற்றப்பட்டதால் குடும்பத்தினர் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
இடமாற்றம் தவிர்க்க முடியாததுதான். அதற்காக பள்ளி கட்டணம் செலுத்திய நிலையில் இடமாற்றப்பட்டது எந்த வகையில் நியாயம்.
இதனால் இடமாற்றப்பட்ட ஊருக்கு குடும்பத்துடன் நாங்களும் செல்ல முடியவில்லை. அருகில் உள்ள ஊர் என்றாலும் பரவாயில்லை.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், அங்கிருந்தவர்கள் கடலுாருக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். இப்படி ஒவ்வொருக்கும் பல மணி நேரம் பயணித்து ஊருக்கு வரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இது பழிவாங்கும் நடவடிக்கை போல் தெரிகிறது என்றனர்.
சிறைக் காவலர்கள் கூறியதாவது: சிறை நிர்வாகத்தை சீர்த்திருத்தம் செய்வதாக கூறி இப்படி இடமாற்றுவது ஊழலுக்குதான் வழிவகுக்கும்.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் ஏற்கனவே சுட்டிக்காட்டியது.
ஆனாலும் அதிகாரிகள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. கவுன்சிலிங் முறையிலோ அல்லது விருப்பமான 3 இடங்களையோ கேட்டு பெற்று இடமாற்றம் வழங்க வேண்டும்.
மருத்துவ ரீதியாக, குடும்ப சூழலால் பாதிக்கப்பட்ட காவலர்கள் சிலர், நீதிமன்றத்தை நாட உள்ளனர். மேலும் காவலர்கள், உதவி ஜெயிலர்களை மாற்றியவர்கள் அமைச்சுப்பணியாளர்களை மாற்றாதது ஆச்சரியமாக உள்ளது. மாற்றினால் அவர்களுக்கான சங்கம் போராடும் என்பதால் அதை தவிர்த்து வருகிறார்கள் என்றனர்.