வீடு பெற்று ஆதாரை இணைக்காமல் போக்குகாட்டும் 18,000 பயனாளிகள்
வீடு பெற்று ஆதாரை இணைக்காமல் போக்குகாட்டும் 18,000 பயனாளிகள்
ADDED : ஜன 29, 2024 08:41 AM

சென்னை: தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நீர்நிலை, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடு வழங்கப்படுகிறது.
இதன்படி, சென்னையில் 1,30 லட்சம் வீடுகள் உள்ளன.
முன்பு, குடும்ப அட்டை அடிப்படையில் வீடு வழங்கப்பட்டது. தற்போது, ஆதார் அட்டை அடிப்படையில், அதுவும் குடும்ப தலைவி பெயரில் மானிய நிதியை ஒரே தவணையாக செலுத்தினால், வீடு வழங்கப்படுகிறது. முன்பு 15, 20 ஆண்டுகள் தவணை அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டன.
பராமரிப்பு தொகையாக ஒவ்வொரு வீட்டிற்கும், ‛லிப்ட்' இல்லாத குடியிருப்பில் மாதம், 250 ரூபாயும், ‛லிப்ட்' உள்ள குடியிருப்பில், 750 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இந்த வகையில், 30 ஆண்டுகளாக தவணை மற்றும் பராமரிப்பு தொகை என, 210 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. முறைகேடாக வீடு வாங்குவதை தடுக்க, 2021ம் ஆண்டு முதல், குடும்ப அட்டை அடிப்படையில் வீடு பெற்ற பயனாளிகள், ஆதாரை இணைக்க வலியுறுத்தப்பட்டது.
ஆனால், 85 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மீதமுள்ள வீடுகளில், வாரிய எஸ்டேட் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி, ஆதார் இணைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, வாரிய எஸ்டேட் அதிகாரிகள் கூறியதாவது:
ஆதாரை இணைக்க வலியுறுத்தி நோட்டீஸ் ஒட்டினால், அதை கிழித்து எறிந்து விட்டு, அதை ஒட்டிய ஊழியர்களை தாக்குகின்றனர்.
போலீசில் புகார் அளித்தால், அவர்கள் கண்டுகொள்வதில்லை. குடும்ப அட்டை அடிப்படையில் முறைகேடாக, 5 முதல் 10 வீடு வாங்கி வாடகைக்கு விட்டவர்கள் தான், ஆதாரை இணைக்க முன்வரவில்லை.
இவர்களின் வீடுகளை ரத்து செய்து, வீடு கேட்டு காத்திருக்கும் பயனாளிகளுக்கு வழங்க, வாரியம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இதேபோல் பலர், 20 முதல் 30 ஆண்டுகளாக தவணை, பராமரிப்பு தொகை செலுத்தவில்லை.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நிலுவை தொகையை ரத்து செய்வோம்' எனக் கூறி, 25 ஆண்டுகளாக, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வந்தனர்.
நீர்நிலைகளில் இருந்து அகற்றும் போது, சில அதிகாரிகள் பராமரிப்பு தொகை செலுத்த வேண்டாம் என, தவறான வாக்குறுதி அளிக்கின்றனர்.
இதனால், 210 கோடி ரூபாய் நிலுவை ஏற்பட்டது. இந்த நிதியை வசூலிக்க, 30 பேரை நியமித்துள்ளோம்.
ஆனால் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் தான், நிலுவை தொகையை வசூலிக்க முடியும்.
இந்த நிதி வசூலானால் தான், பழுதடைந்த குடியிருப்புகளை பராமரிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.