ADDED : மே 16, 2025 11:15 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுவிக்காடு பிரைம் என்ற தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 16 மாணவர்கள், மூன்று மாணவியர் என, 19 பேர் பத்தாம் வகுப்பு படித்தனர். பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததால், இம்மாணவர்கள் தேர்வெழுத ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.
தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முயற்சியில், இந்த மாணவர்கள், தஞ்சை அரசு மாதிரி பள்ளியில் சேர்க்கப்பட்டு, மாநில பாடத்திட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றனர். ஒரு மாதம் மட்டுமே, மாநில பாடத்திட்டத்தில் படித்த இம்மாணவர்கள் அனைவரும், தற்போதைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், ''மாநில பாடத்திட்டத்தில், கற்றலில் ஆரம்பத்தில் மாணவர்களிடம் தடுமாற்றம் இருந்தது. ஆனால், ஒரு மாதத்தில் அனைவரும் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி,'' என்றார்.