உள்ளாட்சி தேர்தலில் 2 கி.மீ., இடைவெளிக்குள் ஒரு ஓட்டுச்சாவடி : மாநில தேர்தல் கமிஷன் பரிசீலனை
உள்ளாட்சி தேர்தலில் 2 கி.மீ., இடைவெளிக்குள் ஒரு ஓட்டுச்சாவடி : மாநில தேர்தல் கமிஷன் பரிசீலனை
ADDED : ஆக 24, 2011 12:06 AM

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக, இரண்டு கி.மீ., இடைவெளிக்குள் ஒரு ஓட்டுச்சாவடி அமைப்பது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது.
இதனால், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கையும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 98 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 29 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. தேர்தலை, அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குள் நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் ஒரு வார்டுக்கு இரண்டு உறுப்பினர் என்ற நடைமுறை, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதை வார்டுக்கு ஒரு உறுப்பினர், 1,500 பேருக்கு ஒரு வார்டு உறுப்பினர் என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கும் பணியில், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. வார்டு பிரிப்பு விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, விரைவில் மாநில தேர்தல் கமிஷன் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன் பிறகு தான், தேர்தல் தொடர்பான பூர்வாங்கப் பணிகளை மாநில தேர்தல் கமிஷன் துவக்கும். இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நடத்துவதற்கு குறைந்த அவகாசமே இருப்பதால், மற்ற பணிகளில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
தற்போது ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்கள் மட்டுமின்றி சில பேரூராட்சிகளில், பல கி.மீ., இடைவெளிக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற நிலையுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளுக்குச் செல்வதற்கு, போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால், நடந்தே சென்று வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டியுள்ளது. இதனால், சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டும், சமீபத்திய சட்டசபை தேர்தலைப் போல தமிழகத்தில் ஓட்டுப்பதிவு எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும், மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, பொதுமக்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக, 2 கி.மீ., இடைவெளிக்குள் ஒரு ஓட்டுச்சாவடி அமைப்பது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. எங்கெல்லாம் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கலாம் என்பது குறித்த சாத்தியக் கூறுகளை அறிந்து அறிக்கை தருமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்து 458 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கீழ் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்), தேர்தல் பதிவு அதிகாரிகள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் (ஆர்.ஓ.,), உதவி தேர்தல் பொறுப்பு அலுவலர் (ஏ.ஆர்.ஓ.,) உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என, ஐந்து லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இம்முறை வாக்காளர் வசதிக்காக, ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதால், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் ஆண்டுதோறும், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
சட்டசபை தேர்தல் ஓட்டு சதவீதம்
2001ம் ஆண்டு 59.07
2006ம் ஆண்டு 70.82
2011ம் ஆண்டு 77.08
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு சதவீதம்
2001ம் ஆண்டு 64.81
2006ம் ஆண்டு 71.53
2011ம் ஆண்டு?
எஸ்.அசோக்குமார்