வந்தாச்சு தீபாவளி... பஸ்சில் சென்றது 2.31 லட்சம் பேர்; ரயில், விமானம் கணக்கு தனி!
வந்தாச்சு தீபாவளி... பஸ்சில் சென்றது 2.31 லட்சம் பேர்; ரயில், விமானம் கணக்கு தனி!
ADDED : அக் 30, 2024 07:16 AM

சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்களில் 2.31 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
அனைவரும் எதிர்பார்த்த தீபாவளி வந்தேவிட்டது. நாளை(அக்.31) தான் பண்டிகை என்றாலும் நேற்று முதலே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. வெளியூர்களில் இருக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் சென்னையில் உள்ள பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் அண்ணாசாலை, கிண்டி, நுங்கம்பாக்கம் என பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் குடும்பத்துடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் நெருக்கடியாக காணப்பட்டது. அரசு ஏற்பாடு செய்திருந்த வழக்கமான மற்றும் சிறப்பு பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.
இந் நிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் சென்னையில் இருந்து அரசு பஸ்களில் எத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என்ற விவரத்தை போக்குவரத்துத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2,31, 363 பயணிகள் பயணித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு நேற்று மட்டும் 4059 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. வழக்கமாக இயங்கும் 2092 பஸ்களுடன், 1967 சிறப்பு பஸ்களும் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு உள்ளன.இது தவிர, விமானங்கள், ரயில்களிலும் ஏராளமான பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.