மாநகர பஸ்களில் இனி 20 கிலோ லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்! வெளியான சூப்பர் அறிவிப்பு
மாநகர பஸ்களில் இனி 20 கிலோ லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்! வெளியான சூப்பர் அறிவிப்பு
UPDATED : நவ 18, 2024 09:35 PM
ADDED : நவ 18, 2024 09:29 PM

சென்னை: மாநகர பஸ்களில் 20 கிலோ வரை சுமைகளை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது;
மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சுமைக் கட்டணம் குறித்து பெறப்பட்ட கருத்துகள், புகார்களின் அடிப்படையில், சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு சுமைக் கட்டணம் வசூலிக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள், பைகள், கேமிரா போன்ற கையடக்கமான சாதனங்கள், லேப்டாப்கள், சிறிய அளவிலான கையில் எடுத்துச் செல்லத்தக்க மின்சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்தியக்கருவிகள் முதலியவைகளும் இலவசமாக ஏற்றிச் செல்லக்கூடிய சுமைகளாகும்.
மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துச் செல்ல டிராலி வகையான சூட்கேஸ்கள் அதிகபட்சமாக 65 செ.மீ., அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகளை கட்டணமின்றி பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.
ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம். பயணிகள் எடுத்து வரும் 65 செ.மீ., அளவுக்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவுக்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிக்கான பயணக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைகளுக்கு பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
பஸ்சில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பஸ்களில் அனுமதிக்கக் கூடாது.
செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல, முன் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.