கனடா துாதரகம் முற்றுகை போராட்டம் ஹிந்து மக்கள் கட்சியினர் 20 பேர் கைது
கனடா துாதரகம் முற்றுகை போராட்டம் ஹிந்து மக்கள் கட்சியினர் 20 பேர் கைது
ADDED : நவ 08, 2024 07:59 PM

சென்னை:கனடாவில் ஹிந்து மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, கனடா துாதரக அலுவலகத்தை முற்றுகையிட சென்ற, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 20 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
கனடா நாட்டில், ஹிந்து கோவிலுக்குள் புகுந்து, காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஹிந்துக்களை தாக்கியதைக் கண்டித்து, சென்னையில் உள்ள கனடா துாதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக, ஹிந்து மக்கள் கட்சி அறிவித்தது. நேற்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள, தாராப்பூர் டவர் அருகே, கனடா துாதரக அலுவலகத்தை முற்றுகையிட வந்த, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 20 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:
கனடா நாட்டில், ஹிந்து கோவில்களுக்குள் நுழைந்த, காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஹிந்து மக்களை தாக்கியதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இது மாநில அரசுக்கு, எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. கனடா நாட்டில் நடந்த, இனவாத தாக்குதலை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக அரசு அனுமதி மறுப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது.
மற்ற நாடுகளில், இந்திய மக்கள் தாக்கப்பட்டாலோ, கைது செய்யப்பட்டாலோ, மத்திய அரசு அவர்களை மீட்க, உடனடியாக அங்குள்ள துாதரகத்தை தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல், ஹிந்து மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி, கனடா துாதரகத்தில் மனு கொடுக்க முயன்றோம். தமிழக அரசு அனுமதி மறுத்து, என்னையும் ஹிந்து மக்கள் கட்சியினரையும் கைது செய்துள்ளது.
இது தமிழக அரசின் ஹிந்து மத வெறுப்புணர்வை காட்டுகிறது. தி.மு.க., அரசு, காவல் துறையினரை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்துவது முறையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.