அதிக மழை பொழிவை தந்த 2023 சென்னை, நெல்லையில் மிக அதிகம்
அதிக மழை பொழிவை தந்த 2023 சென்னை, நெல்லையில் மிக அதிகம்
ADDED : ஜன 02, 2024 10:29 PM
சென்னை:கடந்த, 2022ஐ விட, 2023ம் ஆண்டில் அதிக மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2023ம் ஆண்டில் பெய்த மழை அளவை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழை காலங்களில், 2022ஐ விட, 2023ல் அதிகமாக மழை பொழிவு இருந்துள்ளது என்றும், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில், மிக அதிகளவில் மழை பெய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புள்ளிவிபரங்கள்:
கடந்த, 2023ல், அக்டோபர் 1 முதல் டிச., 31 வரையிலான கால கட்டத்தில், வடகிழக்கு பருவமழை இயல்பாக, 44 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 4 சதவீதம் கூடுதலாக, 46 செ.மீ., பெய்துள்ளது. அதேநேரத்தில், 2022ல், 44 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை, 2022ல், 48 செ.மீ., பெய்துள்ளது. 2023ல், 2022ஐ விட 13 செ.மீ., குறைவாக, 35 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது. அதாவது, 2022ஐ விட, 28 சதவீதம் குறைவாக, 2023ல் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது.
கோடை கால மழையை பொறுத்தவரை, 2022ல் 17 செ.மீ., மழையும்; 2023ம் ஆண்டில், 20 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
பற்றாக்குறை எங்கே?
கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருப்பத்துார் ஆகிய, ௧௩ மாவட்டங்களில், 20 முதல், 55 சதவீதம் அளவுக்கு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில், இயல்பை விட, 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
உபரி மாவட்டங்கள்
தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், இயல்பு நிலையில் இருந்து, 60 சதவீதம் வரை அதிகமாக மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலியில், 60 சதவீதம் கூடுதல் மழை பதிவாகிஉள்ளது.
சென்னை, திருவள்ளூர், கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களில், 59 சதவீதம் வரை கூடுதல் மழை பெய்துள்ளது. 12 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்துள்ளது.
சென்னையில் அதிகம்
சென்னையை பொறுத்தவரை, 2022ல், தென்மேற்கு பருவ மழை, 44 செ.மீட்டர்; 2023ல், 78 செ.மீட்டரும் பெய்துள்ளது. அதாவது, 2022ம் ஆண்டை விட, 2023ம் ஆண்டில், 77 சதவீதம் கூடுதலாக, தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை, 2022ம் ஆண்டில், 92 செ.மீ., மழை பெய்துள்ளது. அதை விட, 18 சதவீதம் கூடுதலாக, 2023ம் ஆண்டில், 109 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.