UPDATED : நவ 27, 2026 09:26 PM
ADDED : நவ 27, 2026 09:26 PM
சென்னை: வழக்கறிஞர் பதிவு நிகழ்ச்சியின்போது, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, 21 வழக்கறிஞர்கள் பதிவை ரத்து செய்து, தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கே.கதிரவன், துணைத் தலைவர் பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் அமல்ராஜ் ஆகியோர் அளித்த பேட்டி:
சென்னையில், நவ.,11ம் தேதி நடந்த வழக்கறிஞர் பதிவு நிகழ்ச்சியில், பார் கவுன்சில் விதிகளை மீறி, தவறு செய்ததாக கண்டறியப்பட்ட, 21 வழக்கறிஞர்கள் பதிவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், விதிகளுக்கு மாறாக செயல்பட்ட வழக்கறிஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பட்டாசு வெடிக்கக் கூடாது; கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து, 'கேக்' வெட்டக்கூடாது, பேனர் வைக்கக் கூடாது என, பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை மீறி செயல்பட்ட, 21 பேர் ‘வீடியோ’, சமூக வலைதளங்களில் வெளியானதால், அவர்கள் மீது, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பதிவு செய்ய வரும் இளம் வழக்கறிஞர்கள், பதவி ஏற்கும்போது ‘பேண்ட்’ வாத்தியம் உள்ளிட்டவைகளை வைத்து, எல்லை மீறி செல்வது, பொது மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதோடு, வழக்கறிஞர்கள் தொழிலுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுடன் மோதலில் ஈடுபட்ட, வழக்கறிஞர் பிரசன்னா வெங்கடேஷ் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளார். அந்த சம்பவத்தில் தொடர்புடைய, மற்ற நான்கு வழக்கறிஞர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை பெற்ற, வழக்கறிஞர்கள் பி.எம்.பாசில், பி வில்லியம்ஸ் ஆகியோர், வழக்கறிஞர் தொழிலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளனர்.
இனி, வாரத்துக்கு ஒரு முறை 300 பேர் மட்டுமே, வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
