காசநோயால் பாதிக்கும் நிலையில் தமிழகத்தில் 2.16 கோடி பேர்
காசநோயால் பாதிக்கும் நிலையில் தமிழகத்தில் 2.16 கோடி பேர்
ADDED : ஜன 02, 2025 11:09 PM
சென்னை:தமிழகத்தில் காசநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையில், 2.16 கோடி மக்கள் இருப்பது, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாடு முழுதும் காசநோயை ஒழிக்க, 100 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை, மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து உள்ளன.
காசநோயால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்தவர்கள் உள்ளிட்டோரிடம், அதற்கான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
புகையிலை, மது பழக்கம் உடையோர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் இணை நோயாளிகளுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கையாக, மக்கள் நல்வாழ்வுத்துறை சேகரித்த ஆய்வில், தமிழகத்தில், 2.16 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்படும் சூழலில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, 'எக்ஸ்ரே' பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சர்க்கரை நோயாளிகள், இணை நோயாளிகள் உள்ளிட்ட விபரங்கள் அரசிடம் உள்ளன. அவர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வந்தபின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளிட்டவை குறித்து, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அவர்களுக்கு பரிசோதனையும் நடத்தப்படுகிறது. அதேபோல, காசநோயாளிகள் விபரமும் அரசிடம் உள்ளது. அவர்களுடன் இருப்பவர்கள், அருகில் வசிப்போருக்கு, காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதன்வாயிலாக, காசநோயால் பாதிக்கப்பட கூடியவர்களை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வாயிலாக, மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.