'வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீண்டுள்ளனர்!'
'வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீண்டுள்ளனர்!'
ADDED : ஜன 17, 2024 03:43 AM

சென்னை : 'பிரதமர் மோடி ஆட்சியில், இதுவரை 25 கோடி பேர், வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடி ஆட்சியால், கடந்த ஒன்பது ஆண்டுகளில், 24.82 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.
'நிடி ஆயோக்' அறிக்கை, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
நாடு முழுதும், 10 கோடி இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 11 கோடி இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன; 11 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 4 கோடி வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அறிவித்துள்ளபடி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 81 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்களுக்காக, 11 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இலவச காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, 12 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பேர் பயனாளிகள் என்ற எண்ணிக்கை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் வறுமை ஒழிப்புக்கான தொலைநோக்கு பார்வைக்கான முழுமையான சான்று.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

