அங்கன்வாடிகளில் 27,000 காலி பணியிடங்கள்: குழந்தைகளின் அடிப்படை கல்வி பாதிப்பு
அங்கன்வாடிகளில் 27,000 காலி பணியிடங்கள்: குழந்தைகளின் அடிப்படை கல்வி பாதிப்பு
ADDED : பிப் 03, 2025 06:47 AM
சென்னை; தமிழகம் முழுதும் உள்ள, 54,439 அங்கன்வாடி மையங்களில், 27,000க்கும் மேற்பட்ட ஆசிரியர், சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், குழந்தைகளின் அடிப்படை கல்வி பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ், குழந்தைகள் இடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க, 1975ம் ஆண்டு, அங்கன்வாடி மையங்கள் துவக்கப் பட்டன.
ஊட்டச்சத்து உணவு
ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது, சுகாதாரம் மற்றும் அடிப்படை கல்வி கற்பிப்பது போன்றவை இம்மையங்களின் நோக்கம்.
இத்திட்டத்தை, அரசு கிராமப்புறங்களில் உள்ள பெண்களை கொண்டு செயல்படுத்தி வருகிறது. கடந்த, 2018 முதல், இத்திட்டத்தில் பணியாற்ற புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால், மொத்தமுள்ள, 54,439 மையங்களில், 27,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி சமையலர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை முறையாக, நிரப்ப வேண்டும் என, ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஒரே ஆசிரியர் இரண்டு முதல் மூன்று மையங்களை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பணிச்சுமை காரணமாக, குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் முறைசாரா முன்பருவ கல்வியை, அவர்களால் கற்பிக்க இயலவில்லை. இதனால், குழந்தைகளின் அடிப்படை கல்வி பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, அங்கன்வாடி மைய ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் உள்ள, 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு, 1.04 லட்சம் ஊழியர்கள் தேவை. தற்போது, 75,000க்கும் மேற்பட்ட ஊழியர்களே உள்ளனர்.
ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை பதிவு செய்வது, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது, சுகாதாரத்துடன் கூடிய அடிப்படை முன்பருவக் கல்வி கற்பிப்பது உள்ளிட்டவை, அங்கன்வாடி மைய ஊழியர்களின் தலையாய கடமை.
இவற்றுடன் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்வது, மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுவது என, பல்வேறு பணிகளில் அங்கன் வாடி மைய ஊழியர்கள் ஈடுபடுகிறோம்.
இந்நிலையில், 9,000 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 27,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால், ஒரே ஆசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
இதனால், குழந்தைகளின் அறிவுக்கூர்மையை பரிசோதிக்க, அடிப்படை எண்கள், எழுத்துக்கள், வண்ணங்களை பிரித்தறிவது, பாடல்களை ஒப்புவிக்க செய்வது போன்றவற்றை மேற்கொள்ள நேரமில்லை.
பல போராட்டம்
பல இடங்களில், ஆசிரியர் வேறு மையங்களுக்கு சென்ற பிறகு, சமையலரே குழந்தைகளை பார்க்க வேண்டியுள்ளது. இதனால், குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்குவதும், துாங்க வைப்பதும் கடினமாக உள்ளது.
காலியிடங்களை நிரப்பக்கோரி பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். எனினும், அரசு தொடர்ந்து குழந்தைகள் நலனில் மெத்தனம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. விரைவில், பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.