ADDED : ஜன 25, 2025 10:37 AM

திருப்பூர்: திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், 28 பேரை கைது செய்து மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், போலி ஆவணங்கள் வாயிலாக வேலைக்கு சேர்ந்து, தனியார் நிறுவனங்களில் பதுங்கி உள்ளனர். தோற்றத்தில் வட மாநிலத்தவர் போல் இருப்பதால், தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு, சந்தேகம் ஏற்படுவது இல்லை.
திருப்பூரில் பல்வேறு இடங்களில் வங்கதேசத்தினர் சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது குறித்து, கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று (ஜன.,25) திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், 28 பேரை கைது செய்து மாநகர போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே, இம்மாதத்தில்,46 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் 15 பேர், திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் 6 பேர், நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் 2 பேர் என மொத்தம் 25 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

