ADDED : அக் 09, 2024 07:31 AM
திருச்சி : திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,க்கள் வருண்குமார், வந்திதா பாண்டே ஒருங்கிணைந்து, சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு, பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பவர்களின் பட்டியலை தயாரித்தனர். 'ஆப்பரேஷன் அகழி' என்ற பெயரில், செப்., 19ம் தேதி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 258 ஆவணங்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு துவங்கி,நேற்று அதிகாலை வரை, இரண்டாவது பட்டியலில் உள்ள ரவுடிகளுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். ரவுடிகள் வசமிருந்த 290 சொத்து ஆவணங்கள், 45 வங்கி கணக்கு புத்தகங்கள், 22 நிரப்பப்படாத காசோலைகள், ஐந்து மொபைல்போன்களை கைப்பற்றினர்.
மேலும், ஆப்பரேஷன் அகழி திட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்படும் என, திருச்சி மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

