UPDATED : ஜன 18, 2025 11:51 PM
ADDED : ஜன 18, 2025 11:48 PM

சென்னை : புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை சந்திக்க, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் நாளை அவர் பரந்துார் செல்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது.
இதற்காக நெல்வாய் நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட, 13 கிராமங்களில் இருந்து, 5,133 ஏக்கர் நிலங்களும், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், நீர்நிலைகள், விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், தண்டலம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் போராட்டம் ஒருபக்கம் நடக்க, மறுபக்கம், நிலம் எடுப்பு உள்ளிட்ட விமான நிலையத்திற்கான அடிப்படை பணிகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏகனாபுரம் கிராமம் முழுதுமாக கையகப்படுத்தப்பட இருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்கும் அக்கிராம மக்கள், 900 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர், ஏகனாபுரத்தில் போராடும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரத்தில் முதல் மாநாட்டை நடத்தினார்.
அதில், 'பரந்துார் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக, விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர். விஜயை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தனர்.
சமீபத்தில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்த விஜய், நிவாரண பொருட்களை வழங்கினார். அரசியல் கட்சி துவங்கிய பின்னும் களத்திற்கு வரவில்லை என, விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதை வைத்து, தி.மு.க.,வினர் விஜயை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, விஜய் நாளை பரந்துார் செல்கிறார். இதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அனுமதி அளித்துள்ளது.
போராட்ட குழுவினரை விஜய் சந்திக்கப் போகும் இடத்தை, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
நாளை பரந்துார் செல்லும் விஜய், ஏகனாபுரம் கிராமம் அருகே, அம்பேத்கர் திடல் பகுதியில் வேனில் இருந்தவாறு பேச அனுமதித்து உள்ளதாகவும், மக்களை அவர் சந்திக்கும் இடமும், நேரமும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், த.வெ.க.,வினர் தெரிவித்து உள்ளனர்.
விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பின், விஜய், முதல் முறையாக மக்களை சந்திக்க, நாளை களத்திற்கு வருகிறார் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் விதித்துள்ள கட்டுப்பாடுகள்
அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான், மக்களை விஜய் சந்திக்க வேண்டும்
அதிக கூட்டம் கூடாமல், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வர வேண்டும்
அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் கட்சியினர் வர வேண்டும்.