சென்னையில் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்ற 3 பேர் கைது: 5 ஆயிரம் பட்டங்கள் பறிமுதல்
சென்னையில் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்ற 3 பேர் கைது: 5 ஆயிரம் பட்டங்கள் பறிமுதல்
UPDATED : நவ 26, 2024 03:08 PM
ADDED : நவ 26, 2024 02:59 PM

சென்னை: சென்னையில் தடையை மீறி பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,030 பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் மாஞ்சா நூல் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் அவ்வபோது, இந்த மாஞ்சாநூல் காரணமாக விபத்துகள் நிகழ்கின்றன. இதில் அப்பாவிகள் சிலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 17 ம் தேதி மாஞ்சா நூல் அறுத்து பெண் ஒருவரும், சிறுவன் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, இந்த விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், அதில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகின்றனர். அதில் இணையதளங்கள் மூலம் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
தொடர் விசாரணையில் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாசில் என்பவர் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த இம்ரான் , இல்லாஹி என்ற மன்சூர், ஆகியோரை பெங்களூருவில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,030 பட்டங்கள், 50 மாஞ்சா நூல்கள், 120- நூலை சுற்றி வைக்க உதவும் கருவிகள் , 3 மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்களை சென்னை அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.