ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
UPDATED : ஜூலை 12, 2025 02:27 PM
ADDED : ஜூலை 12, 2025 08:17 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவேங்கட உடையான்பட்டி கீழத்தெருவை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன், 10, கனகராஜ் மகன் மாதவன்,10, இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர். ஸ்ரீதர் மகன் ஐஸ்வந்த்,8, மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில், செல்லப்பன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி அய்யனார்கோவில் மண்டலபிஷேகம் விழாவுக்காக கிராமமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இதில், பாலமுருகன்,மாதவன்,ஐஸ்வந்த் பெற்றோர்களுக்கு கலந்து கொண்டு உள்ளனர். பிறகு மண்டலபிஷேகம் முடிந்து நேற்று இரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், பிள்ளைகள் வீட்டிற்கு வெகுநேரமாகியும் வரவில்லை. இதையடுத்து கிராம மக்களுடன் இணைந்து பல இடங்களில் தேடினர்.
மருதக்குடி பிள்ளையார் கோவில் குளத்தில் சிறுவர்கள் குளித்தாக கேள்விப்பட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது, குளத்தின் கரையில், ஆடைகள் மற்றும் புத்தகப்பை, செருப்புகள் மட்டுமே கிடந்துள்ளது. தொடர்ந்து கிராம மக்கள் சிலர் குளத்தில் இறங்கி தேடிய போது, சிறுவர்கள் பாலமுருகன்,மாதவன், ஐஸ்வந்த் மூவரும் தண்ணீரில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இவர்களை கிராம மக்கள் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் மூன்று சிறுவர்களும் அதிகளவில் தண்ணீரை குடித்த நிலையில், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் பள்ளியில் இருந்து வந்த சிறுவர்கள் மூவரும், குளத்தில் ஆழம் அதிகம் இருப்பதை அறியாமல் இறங்கிய நிலையில், நீச்சல் தெரியாமல் மூழ்கி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.