ADDED : நவ 20, 2026 09:19 PM
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, கதம்ப வண்டுகள் கொட்டி, மூவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ப.வேலுார் அருகே ஆவின் தோட்டம் பகுதியில் சாலையோரம் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இன்று (நவ.,20), இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில், 50க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் விவசாய பணியில் ஈடுபட்டனர்.
மதியம், 12:00 மணியளவில், அப்பகுதி சாலையோரம் சருகுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அதிலிருந்து எழுந்த புகையால், அங்கிருந்த தென்னை மரங்களில் கூடுகட்டியிருந்த கதம்ப வண்டுகள் கூட்டமாக வெளியேறி, விவசாய தொழிலாளர்களையும், டூ – வீலர்களில் சென்றவர்களையும் விரட்டி கொட்டின.
இதில் கரூர் பாபு, 51, ப.வேலுார் சுப்பிரமணி, 70, மலையப்பன், 51, மாரப்பன், 65, பார்வதி, 36, பெரியசாமி, 34, கார்த்திக், 28, உட்பட, 12 பேர் மீட்கப்பட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மூன்று பேர் தீவிர சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், மயக்க மருந்து கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து, கதம்ப வண்டுகளை கட்டுப்படுத்தினர்.
