13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை: கூட்டு பலாத்காரம் செய்த 3 ஆசிரியர்கள் கைது
13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை: கூட்டு பலாத்காரம் செய்த 3 ஆசிரியர்கள் கைது
UPDATED : பிப் 07, 2025 07:28 AM
ADDED : பிப் 06, 2025 02:49 AM

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவியை, அதே பள்ளியின் ஆசிரியர்கள், மூவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரின்படி, அவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி, ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை. நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு, தலைமை ஆசிரியை சென்று விசாரித்தார்.
அப்போது, அதே பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, ஆகியோர், தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானதால், கருக்கலைப்பு செய்ததாக அந்த மாணவி தெரிவித்தார். இதை வெளியே கூறினால் அவப்பெயர் ஏற்படும் என மறைத்ததாக, அவரது பெற்றோரும் கூறினர்.
இதுகுறித்து அந்த தலைமை ஆசிரியை, குழந்தைகள் நல பாதுகாப்பு மையம், பர்கூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் அளித்தார்.
பர்கூர், டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோரை, போக்சோவில் கைது செய்தனர்.
தலைமையாசிரியர் புகாரின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட, மூன்று ஆசிரியர்களை விசாரித்து, வட்டார கல்வி அலுவலர்கள் அளித்த அறிக்கையின்படி, அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சந்துார் கூட்ரோடு சந்திப்பு மற்றும் பர்கூர் அருகே என, இரு இடங்களில், அந்த ஆசிரியர்களை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை, கிருஷ்ணகிரி, ஏ.டி.எஸ்.பி., சங்கர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர். 'மாணவியை சீரழித்த ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என கோஷமிட்டனர்.
இரண்டாவது கொடூரம்
கந்திகுப்பம் தனியார் பள்ளியில் கடந்த, 2024 ஆகஸ்ட் மாதம் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் கைதான முக்கிய குற்றவாளி சிவராமன், உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.
பல்வேறு பள்ளிகளில் அந்தக்குழு விசாரணை நடத்தியது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம், அரசு பள்ளியில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.