ADDED : டிச 06, 2024 03:04 AM

சென்னை; ''மகா கும்பமேளாவை முன்னிட்டு, மூன்று ஆன்மிக சுற்றுலா ரயில்கள் இயக்கப்படும்,'' என, ஐ.ஆர்.சி.டி.சி., தென்மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு கூறினார்.
அவர் அளித்த பேட்டி: மகா கும்பமேளா, அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்குகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க வசதியாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், 13க்கும் மேற்பட்ட சிறப்பு சுற்றுலா ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதில், 'மகா கும்பம் 2025' என்ற பெயரில், தமிழகத்தில் இருந்து மூன்று ஆன்மிக சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
முதல் ரயில், திருநெல்வேலியில் இருந்து ஜன., 16ல் புறப்பட்டு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது.
ஒன்பது நாள் சுற்றுலாவுக்கு, 'ஏசி' இல்லாத பெட்டியில் ஒருவருக்கு, 28,100 ரூபாய், மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணிக்க 44,850 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, இரண்டாவது ரயில், புதுச்சேரியில் இருந்து பிப்., 5ம் தேதி புறப்பட்டு, சென்னை வழியாக செல்கிறது.
மூன்றாவது ரயில், கோவையில் இருந்து பிப்., 18ம் தேதி புறப்பட்டு, காட்பாடி வழியாக செல்கிறது. இந்த மூன்று ரயில்களும் பிரயாக்ராஜ், வாரணாசி, அயோத்தியை காணும் வகையில் இயக்கப்பட உள்ளன.
கூடுதல் தகவல்களை பெற, 90031 40739, 82879 31977 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.