'மாஜி' சிறப்பு டி.ஜி.பி.,க்கு 3 ஆண்டு சிறை: உறுதி செய்தது விழுப்புரம் கோர்ட்
'மாஜி' சிறப்பு டி.ஜி.பி.,க்கு 3 ஆண்டு சிறை: உறுதி செய்தது விழுப்புரம் கோர்ட்
ADDED : பிப் 13, 2024 07:03 AM

விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், மூன்று ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, விழுப்புரம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் மீதும், புகார் கொடுக்க காரில் சென்ற பெண் அதிகாரியை தடுத்ததாக, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.
தள்ளுபடி
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், ராஜேஷ்தாசுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20,500 ரூபாய் அபராதம், கண்ணனுக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்து, கடந்தாண்டு ஜூன் 16ல் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜூலையில் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணை நடந்து வந்தது. பிப்., 1ம் தேதி, விழுப்புரம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தன் வாதத்தை தானே முன் வைத்து, நான்கு நாட்கள் வாதிட்டார்.
பிறகு, கடந்த 9ம் தேதி அரசு தரப்பில் வாதிட்டு முடித்தனர். பின், நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கின் தீர்ப்பு 12ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
மேல்முறையீடு
அதன்படி, மேல்முறையீடு வழக்கின் விசாரணை நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்கள் பழனிவேல், ரவீந்திரன், ஹேமராஜன் ஆஜராகினர்.
அப்போது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கின் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிக்குட்பட்டதால், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நாங்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதுவரை தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என, கோரினார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி பூர்ணிமா, தீர்ப்பை வாசித்தார்.
ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோரது மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும், மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தும் அவர் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்துராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக, அவர்களது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
மேல்முறையீடு செய்ய ஒருமாதம் அவகாசம் உள்ளதால், தற்போது ராஜேஷ்தாசை சிறையில் அடைக்க வாய்ப்பில்லை என, அவர்கள் தெரிவித்தனர்.