பணிகளில் 30% பாக்கி; முடிந்தால் நிரந்தர தீர்வு: சென்னை மக்களுக்கு ஸ்டாலின் உத்தரவாதம்
பணிகளில் 30% பாக்கி; முடிந்தால் நிரந்தர தீர்வு: சென்னை மக்களுக்கு ஸ்டாலின் உத்தரவாதம்
ADDED : அக் 16, 2024 01:40 PM

சென்னை: 'மழைநீர் வடிகால், பணிகளில் 30 சதவீதம் பாக்கி இருக்கிறது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால், சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கிண்டி குதிரைப்பந்தய மைதானத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன் உடன் இருந்தனர். புதிய நீர்நிலையில் மழை நீர் சேகரிப்பது குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதையடுத்து, பள்ளிக்கரணை அருகே நாராயணபுரம் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில், கை கொடுத்திருக்கிறது. திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., குழு அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஒரே நேரத்தில் முழுமையாக நிறைவேற்ற முடியாது. மழைநீர் வடிகால், பணிகளில் 30 சதவீதம் பாக்கி இருக்கிறது. வரும் காலத்தில் அதுவும் நிறைவு பெறும்.
மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால், சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதுவும் விரைவில் நிறைவு பெறும். சென்னையில் மழை பாதிப்புகளை சமாளிப்பதற்காக 3 மாதங்களாக நடவடிக்கை எடுத்து வந்தோம். முழுவீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பல்வேறு துறை அதிகாரிகள் முழுவீச்சாக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.