UPDATED : அக் 31, 2026 11:46 PM
ADDED : அக் 31, 2026 11:46 PM

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பால், நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், 30 கிராம ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் பெய்யும் மழைநீர், வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் பெருக்கெடுத்து அதன் அடிவாரத்தில், நாகநதியாக உருவாகிறது. இந்த நீர், கண்ணமங்கலம், கொளத்துார், அழகுசேனை, வண்ணாங்குளம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை, 45 கி.மீ., துாரம் கடந்து, ஆரணியில், கமண்டல நதியுடன் இணைந்து, கமண்டல நாகநதியாக உருவாகிறது.
கடந்த, 1933ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், 30 கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி பின், ஆரணி கமண்டல நதியுடன் இணையும் வகையில் கால்வாய் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொளத்துார் மற்றும் சிருங்கேரி பகுதிகளிலும் சிறிய அளவிலான தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, நாகநதியில் நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளாலும், துார்வாரப்படாமலும் புதர்மண்டி நீர் வீணாக செல்கிறது.
இவற்றை சீரமைக்க கோரி, நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காததால், தற்போது பெய்த மழையில் நாகநதியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும், கொளத்துார் ஏரி தடுப்பணை, கண்ணமங்கலம் ஏரி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து செல்லாமல் வறண்டு காணப்படுகின்றன.
அதனால், அப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரி தொடர்ந்து வறண்டு காணப்படுவதால், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே, நாகநதி நீர் கால்வாயை பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
