ஏரியில் மண் அள்ளிய 30 லாரிகள் 5 பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
ஏரியில் மண் அள்ளிய 30 லாரிகள் 5 பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
UPDATED : அக் 29, 2026 12:29 AM
ADDED : அக் 29, 2026 12:27 AM
செய்யாறு: செய்யாறு அருகே, ஏரியில் மண் அள்ளிய, 30 லாரிகள் மற்றும், 5 பொக்லைன் இயந்திரங்களை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பாவூர் கிராமத்திலுள்ள ஏரி, 480 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நீரால் பாவூர், நெமிலி, சிறுநல்லுார், உக்கல், புதுப்பாளையம் ஆகிய, 5 கிராம மக்கள் பாசன வசதி பெறுகின்றனர். ஏரி மையத்தில், 5 ஏக்கரில் மண் அள்ள, சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்.
மண் அள்ள, பாவூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த லாரி மற்றும் பொக்லைன் வாடகைக்கு எடுத்து, அப்பகுதி மற்றும் சென்னைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறார். தற்போது மழை பெய்து, ஏரி நடுவில் நீர் நிரம்பியதால், ஏரி முன்பகுதியில் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு, தினமும், 30 லாரிகள், மற்றும், 5 பொக்லைன் இயந்திரம் கொண்டு, இரவு பகலாக மண் அள்ளப்படுகிறது.
அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே மண் அள்ள வேண்டும் என பொதுமக்கள் கூறி வந்தனர். அதை கண்டு கொள்ளாமல், லாரிகள் மூலம் மண்ணை அள்ளி சென்றதால், ஆத்திரமடைந்து மக்கள், நேற்று ஏரியில் மண் அள்ளிய, 30 லாரிகள் மற்றும், 5 பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்தனர். அவர்களிடம் துாசி போலீசார், வி.ஏ.ஓ., குணசேகரன் பேச்சு நடத்தினர்.
அப்போது அனுமதித்த இடங்களில் மட்டுமே மண் அள்ள கூறியதால், லாரியில் ஏற்றிய மண்ணை அங்கேயே கொட்டி விட்டு, லாரியை அங்கிருந்து எடுத்து சென்றனர்.
