கோவையில் அடுத்தடுத்து வெடித்த 22 காஸ் சிலிண்டர்களால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக தப்பிய 300 தொழிலாளர்கள்
கோவையில் அடுத்தடுத்து வெடித்த 22 காஸ் சிலிண்டர்களால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக தப்பிய 300 தொழிலாளர்கள்
ADDED : ஆக 30, 2026 05:33 AM

கோவை: கோவையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 22 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. தொழிலாளர்கள் பணிக்கு சென்றதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற, பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், கோவை நவஇந்தியா பகுதியில் தற்காலிக தகர குடியிருப்பில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
அவர்களுக்காக மொத்தம், 72 தங்கும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் எட்டு பேர் தங்கியுள்ளனர்.
தீப்பற்றியது நேற்று காலை, 11:30 மணியளவில், பணியில் இருந்த ஐந்து தொழிலாளர்கள் தேநீர் தயாரிக்க குடியிருப்புக்கு வந்தனர். அப்போது பயன்படுத்தப்பட்ட சமையல் காஸ் சிலிண்டரில் திடீரென தீப்பற்றியது.
தீயை உடனடியாக அணைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சாக்கு பைகளை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
தீ வேகமாக பரவ தொடங்கியதால், அங்கிருந்தவர்கள் ஓடினர். சிறிது நேரத்தில் தீ அருகில் வைக்கப்பட்டிருந்த மற்ற சிலிண்டர்களுக்கும் பரவியது. அடுத்தடுத்து ஏழு சிலிண்டர்கள் வெடித்து, குடியிருப்பின் ஒரு பகுதியில் தீ முழுமையாக பரவியது.
ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த 60 வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலும் சில சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்தன. மொத்தம், 22 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், 40 தங்கும் அறைகள் கடுமையாக சேதமடைந்தன. அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களின் ஆவணங்கள் மற்றும் உடைமைகள் தீயில் கருகின.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு சென்றிருந்தது, பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்த்தது. இல்லையெனில் நுாற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கும்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பல சிலிண்டர்கள் வெப்பம் காரணமாக எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாய நிலையில் இருந்தன. தீயணைப்பு வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, வெடிக்கும் நிலையில் இருந்த 30க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விசாரணை ஒரே வளாகத்தில் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்கள் எவ்வாறு சேமிக்கப்பட்டன.
அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா; போதுமான தீ பாதுகாப்பு வசதிகள் இருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கணேசன் கூறுகையில், ''விபத்து குறித்து விரிவாக விசாரிக்கப்படும்,'' என்றார்.
தற்காலிக பயன் பாட்டிற்கு 5 கிலோ சிலிண்டர்கள் இருக்கும்போது, விபத்து ஏற்பட்ட இடத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்கள் இருந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
