30,000 விவசாய மின் இணைப்பு வழங்க அரசு அனுமதிக்காக வாரியம் காத்திருப்பு
30,000 விவசாய மின் இணைப்பு வழங்க அரசு அனுமதிக்காக வாரியம் காத்திருப்பு
ADDED : செப் 24, 2024 04:40 AM

சென்னை : கடந்த ஆண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க, அரசு அனுமதி அளித்ததில், 20,000 மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு அளிக்கப்பட்ட அவகாசம் மார்ச்சுடன் முடிவடைந்து விட்டதால், நிலுவையில் உள்ள இணைப்புகளை வழங்க, தமிழக அரசிடம் மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு சாதாரண மற்றும் சுயநிதி பிரிவில் மின் இணைப்பு வழங்குகிறது. அதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் வினியோகம் ஆகிய அனைத்தும் இலவசம்.
சுய நிதி பிரிவில் வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் இலவசம்.
மொத்தம் உள்ள 23.56 லட்சம் விவசாய இணைப்பு களுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதால், வாரியத்திற்கு ஆண்டுக்கு 7,280 கோடி ரூபாய் செலவாகிறது. இதை, தமிழக அரசு வழங்குகிறது. மின் வாரியமும், அரசும் நிதி நெருக்கடியில் உள்ளன.
எனவே, ஆண்டுதோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. விவசாய இணைப்பு கேட்டு, 2021 மார்ச் வரை, 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.
இதனால், அந்த ஒரே நிதியாண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகளும்; 2022 - 23ல், 50,000 இணைப்புகளும் வழங்கப்பட்டன.
கடந்த 2023 - 24ல், 50,000 இணைப்புகள் வழங்க அரசு அனுமதி அளித்தது. அதில், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில், 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன.
இதனால், மின் இணைப்பு வழங்க தேர்வான பயனாளிகள், இணைப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
குறிப்பாக, சுயநிதி பிரிவில், 'தத்கல்' எனப்படும் விரைவு திட்டத்தின் கீழ், வழித்தட செலவுக்கு முழு தொகையையும் செலுத்திய விவசாயிகள், மின் இணைப்பு வழங்குமாறு பொறியாளர்களிடம் தகராறு செய்து வருகின்றனர்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு இறுதியில், தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால், 795 டிரான்ஸ்பார்மர், 15,000 கம்பங்கள், 985 கி.மீ., மின் கம்பி உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைந்ததால், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டில், 50,000 மின் இணைப்புகள் வழங்க அரசு அளித்த அவகாசம் மார்ச்சுடன் முடிந்து விட்டது.
எனவே, அந்த ஆண்டில் வழங்கியது போக, மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க, அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், விரைவாக மின் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.