கோவில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு 21ல் திருமணம்: புத்தாடை வழங்கல்
கோவில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு 21ல் திருமணம்: புத்தாடை வழங்கல்
ADDED : அக் 19, 2024 01:45 AM

சென்னை: 'பொருளாதாரத்தில் பின்தங்கிய, 700 ஜோடிகளுக்கு, கோவில்கள் சார்பில், நான்கு கிராம் தங்கத்தாலி உட்பட, 60,000 ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமணம் நடத்தி வைக்கப்படும்' என, சட்டசபையில், அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அரசு அறிவித்தது.
முதற்கட்டமாக, சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் வரும், 21ம் தேதி, திருவான்மியூரில், 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் மணமக்களுக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று, பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டு புடவைகளை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார்.
பின், அளித்த பேட்டி:
கோவில்கள் சார்பில், வரும் 21ம் தேதி, சென்னை திருவான்மியூரில், 31 ஜோடிகளுக்கு திருமணத்தை, முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளார். அதேநாளில், மாநிலம் முழுதும், 304 ஜோடிகளுக்கு திருமணம் நடக்க உள்ளது.
மாதந்தோறும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடத்தும் திட்டம், 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை, இரண்டு பகுதிகளாக பிரித்து, ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் தொடரலாம் எனவும், அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிடவும், நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக, நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்து, ஆய்வு செய்ய வெளிமாநில கலெக்டரை நியமித்திருக்கிறது. திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட ரீல்ஸ் பிரச்சனை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு படி செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.