ADDED : ஜூன் 05, 2025 07:39 AM
திண்டிவனம்; பா.ம.க.,வில், இதுவரை 31 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 9 மாவட்ட தலைவர்களை நியமித்து, ராமதாஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பா.ம.க.,வை பொறுத்தவரை, 108 மாவட்ட செயலாளர்கள், 108 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த மாவட்ட செயலாளர்களை நீக்கி, புதிதாக 31 மாவட்ட செயலாளர்களை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். புதிதாக 9 மாவட்ட தலைவர்களையும் நியமித்துள்ளார்.
இந்நிலையில், ராமதாஸ் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி மற்றும் மாநில வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோபு தலைமையில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கட்சி நிறுவனருடன் தனியாக ஆலோசனை நடத்தினர். இதில் கட்சியின் சட்டதிட்டங்கள், பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.