ADDED : டிச 05, 2024 03:51 AM
சென்னை: தமிழகத்தில் புயல் மழையில், 10 குழந்தைகள் உட்பட 33 பேர் இறந்துள்ளனர்.
புயல் மற்றும் கன மழை காரணமாக, சென்னை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு
இம்மாதம் 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை மழைக்கு 10 பெண்கள், 13 ஆண்கள், 10 குழந்தைகள் என, 33 பேர் இறந்துள்ளனர்.
இவர்களில் 14 பேர் வெள்ள நீரில் மூழ்கியும், ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கியும் இறந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி ஐந்து பேர் இறந்துள்ளனர். மற்றவர்கள் மின்னல் தாக்கி, சுவர் இடிந்து இறந்துள்ளனர்; 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 14 பேர் விழுப்புரம்; 12 பேர் திருவண்ணாமலை; மூன்று பேர் கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ராணிப்பேட்டை, நீலகிரி, திருப்பத்துார், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
சேத மதிப்பீடு
வெள்ள நீரில் மூழ்கி, 1.55 லட்சம் கோழிகள், 274 மாடுகள், 684 ஆடுகள், 388 கன்றுகள் இறந்துள்ளன.
குடிசை வீடுகளில் 315 முழுமையாக, 3,365 பாதி அளவிலும் சேதமடைந்துள்ளன. கான்கிரீட் வீடுகளில் 16 முழுமையாகவும், 931 பாதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
மாநிலம் முழுதும் மழையில் 2.15 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன; 45,016 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தோட்டக்கலை பயிர்கள் 5,288 ஏக்கர் தண்ணீரில் மூழ்கியும், 1,173 ஏக்கர் சேதமடைந்ததும் தெரிய வந்துள்ளன. கணக்கெடுப்பு பணி முடியும்போது, முழுமையான சேத மதிப்பீடு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.