"மாஜி'க்கு துணை போகும் குற்றப்பிரிவு போலீசார் : பால் வியாபாரி குற்றச்சாட்டு
"மாஜி'க்கு துணை போகும் குற்றப்பிரிவு போலீசார் : பால் வியாபாரி குற்றச்சாட்டு
UPDATED : ஆக 03, 2011 10:40 PM
ADDED : ஆக 03, 2011 08:30 PM

சேலம் : 'சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், முன்னாள் அமைச்சருடன் சமாதானமாக போகும் படி போலீஸ் அதிகாரிகளே கூறுகின்றனர்' என, பால் வியாபாரி பழனிவேல் குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் கோரிமேட்டை சேர்ந்த ராஜுவின் மகன் பழனிவேல், சேலம் துணை கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: சேலம் குமாரசாமிப்பிட்டி ஐஸ்வர்யா கார்டனில், 2,200 சதுர அடி நிலத்தை, அதன் உரிமையாளர் சேலம் சங்கர் நகரை சேர்ந்த சதாசிவம் மகன் மாணிக்கவாசகத்தின், 'பவர் ஏஜன்ட்' மூலம், பதிவு கிரயம் பெற்றேன்.
இந்த இடத்துக்கான வீட்டு வரி, பட்டா என அனைத்தையும், என் பெயரில் மாற்றி, முறையாக வரி செலுத்தி, மின்வாரிய பயன்பாட்டுக்கு கட்டணமும் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், 2008 ஆகஸ்ட் 25ல், சேலம் அழகாபுரம் சோனா நகரை சேர்ந்த பெரியய்யா மகன் கணேசன் என்பவர், மாணிக்க வாசகத்துடன் கூட்டு சதி செய்து, பொய்யான கிரய பத்திரம் தயாரித்து, என் சொத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.
ஒரே சொத்தை இரண்டு நபர்களுக்கு, மாணிக்கவாசகம் விற்பனை செய்துள்ளார். இந்த இருவரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்துக்கு நிலம் வாங்கிக் கொடுப்பது, வீடு கட்டி கொடுப்பது போன்ற நெருக்கமான உறவு கொண்டிருந்ததால், இது சம்பந்தமாக அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முடக்கி வைத்து விட்டனர்.
இந்நிலத்தின் மீது சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கணேசன், மாணிக்கவாசகம் ஆகியோர், என்னை ஏமாற்றி மோசடி செய்து பொய் பத்திரங்கள் தயாரித்து, நிலத்தை அபகரிக்க, அடியாட்களை கொண்டு மிரட்டி வருகின்றனர். நிலத்தையும், ஆவணங்களையும் மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 9, 2011ல் வழங்கிய இம்மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. 25 நாட்களுக்கு மேலாகியும், குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சேலம் - சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சத்ய பிரியாவிடம் பழனிவேல், நேற்று முன்தினம், மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய நிலத்தை பொய் பத்திரம் தயார் செய்து, அபகரிக்க முயற்சி செய்து வரும் கணேசன், மாணிக்கவாசகம் மீது, கடந்த ஜூலை 9ல், புகார் கொடுத்தேன். புகார் மனுவை ஆய்வு செய்து, என்னுடைய ஆவணங்களை பரிசீலித்து, அரசு வக்கீலின் கருத்துரை பெற்று வழக்கு பதிவு செய்ய, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சைக்கு அனுப்பப்பட்டது.
அவரும் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனும், என்னை அழைத்து, 'இந்த பிரச்னையை பைசல் செய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நான் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை வைத்து பேச ஏற்பாடு செய்து கொடுக்கிறேன். அவர் மூலம் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என, வற்புறுத்துகின்றனர்.
சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு, 15 நாட்களுக்கும் மேலாக தினமும் சென்றும், இதுவரை நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்ட கணேசனுடன் பேசி, பைசல் செய்ய வற்புறுத்துகின்றனர். இந்நிலையில், சொத்தை அபகரிக்க கணேசன் அடியாட்களை கொண்டு மிரட்டி வருகிறார். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
பழனிவேலுவை போல் பலரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் மகன் ராஜா, பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி ஆகியோர் மீது, பல புகார்கள் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டிய சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், பகிரங்கமாக, முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுடன் பேசி கட்டப் பஞ்சாயத்து மேற்கொள்வதாக, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் செல்கின்றன.
முன்னாள் அமைச்சரின் விசுவாச அதிகாரிகள் பலர், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்.
ஆனால், தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள், தங்களின் பணி மாற்றத்தை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதோடு, தொடர்ந்து முன்னாள் அமைச்சருக்கு தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு இந்த புகார் மனு ஒன்றே எடுத்துக்காட்டு என்கின்றன, போலீஸ் வட்டாரங்கள்.