"பாசி' நிதி நிறுவன ஆவணங்கள்சி.பி.ஐ., கோர்ட்டில் ஒப்படைப்பு
"பாசி' நிதி நிறுவன ஆவணங்கள்சி.பி.ஐ., கோர்ட்டில் ஒப்படைப்பு
ADDED : ஆக 23, 2011 04:56 AM
கோவை:திருப்பூர், 'பாசி' நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர்.முதலீட்டாளர்கள் டிபாசிட் செய்த, 1,600 கோடி ரூபாயை மோசடி செய்து, தலைமறைவாக இருந்த பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர், கடந்த வாரம், சி.பி.ஐ., அதிகாரிகளால், கவுகாத்தியில் கைது செய்யப்பட்டனர்.கோவை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும், ஏழு நாள் கஸ்டடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், கதிரவன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.மோகன்ராஜ், கமலவள்ளியிடம் கூடுதல் தகவல் பெறுவதற்காக மேலும் ஐந்து நாட்கள் கஸ்டடி கேட்டு, அனுமதி பெற்றனர்.
இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ.,அதிகாரிகள், நேற்று முன்தினம், திருப்பூரில் உள்ள பாசி நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் இயக்குனர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் கைப்பற்றப்பட்ட, முதலீட்டாளர்களின் விண்ணப்பங்கள், போட்டோக்கள், வீடியோ கேமரா, முக்கிய ஆவணங்கள் அடங்கிய, 100 பைல்கள், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு, பணம் இல்லாமல் திரும்பிய செக்குகள் என, 15 அட்டை பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட ஆவணங்கள், கோவை சி.பி.ஐ., கோர்ட்டில் சரிபார்க்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டன.