sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"மரங்கள், உடலுக்கு வெளியில் இருக்கும் நுரையீரல்கள்'

/

"மரங்கள், உடலுக்கு வெளியில் இருக்கும் நுரையீரல்கள்'

"மரங்கள், உடலுக்கு வெளியில் இருக்கும் நுரையீரல்கள்'

"மரங்கள், உடலுக்கு வெளியில் இருக்கும் நுரையீரல்கள்'


ADDED : செப் 18, 2011 01:08 AM

Google News

ADDED : செப் 18, 2011 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாதனை புத்தகங்களில் இடம் பிடிப்பதற்காக நம்மவர்கள் நடும் மரங்கள் நான்கு நாட்களுக்குள் பட்டுப்போகிறது.

ஆனால், சாதாரண மக்கள் முதல் சக்கரவர்த்திகள் வரை அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக நடப்பட்ட மரங்களால்தான், மௌரிய சாம்ராஜ்யத்தின் பெருமை, இன்றைக்கும் சரித்திர புத்தகத்தில் சாகாவரம் பெற்று நிலைத்து நிற்கிறது. இதிலிருந்து நோக்கங்கள்தான் லட்சியங்களின் உன்னதத்தையும் நீடித்த தன்மையையும் தீர்மானிக்கின்றன என்பது புலனாகிறது.



'அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்' என்பது எட்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு பாடமாக இருந்தது ஒரு காலம். இன்றைக்கு வேகமாகப் பரவிவரும், இயற்கை குறித்த விழிப்புணர்வு மற்றும் மரங்கள் குறித்த அக்கறை காரணமாக, அதே எட்டாம் வகுப்பு பிள்ளைகள் ஒரு மரம் எத்தனை மனிதனுக்கான உயிர்க் காற்றை உற்பத்தி செய்கிறது என்பது குறித்து, பெரியவர்களுக்கு பாடம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விழப்புணர்வு மற்றும் அக்கறைக்கு காரணம் அரசுகள் மட்டுமல்ல. இதன் பின்னணியில், எண்ணற்ற சூழல் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் இடைவிடாத உழைப்பு உள்ளது. இதில், சிறுதுளி அமைப்பு குறிப்பிடத்தக்கது.



தொலைவிலிருந்து பார்க்கையில் வாமண அவதாரத்தைப் போல் குட்டியாத் தெரிகிற மேற்குத் தொடர்ச்சி மலை, விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பண்ணாரிக்குப் பக்கத்தில் இருக்கிறது புதுவடவள்ளி கிராமம். வாமணன், மூன்றாமடி வைப்பதற்காக தன் தலையை தாழ்த்திய மகாபலி சக்கரவர்த்தியைப் போல், மலையின் பாதங்களை பணிந்து கிடக்கும் அந்த கிராமமே இந்த மரம் நடும் விழாவுக்காக திருவிழாக் கோலம் பூண்டு நின்றது. பண்ணாரி ரூரல் பவுண்டேசன் மற்றும் சிறுதுளி அமைப்புகள் இணைந்து நடத்திய இவ்விழாவை தங்கள் இல்லத்தில் நடக்கும் இனிய விழாவாய் கொண்டாடிய இம்மக்களோடு, பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறுதுளி, பண்ணாரி ரூரல் பவுண்டேசன் மற்றும் ராக் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.



பண்ணாரி ரூரல் பவுண்டேசன் தலைவர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், ''மொத்த நிலப் பரப்பில் 33 சதம் வனங்களாக இருக்க வேண்டும் என்பார்கள். இந்தியாவில் அப்படியில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சூழல் விழிப்புணர்வு காரணமாக தமிழகத்தின் பசுமைப் பரப்பு சற்று அதிகரித்து வருகிறது என்கிற செய்தி நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. இங்கு மரம் நட்டதன் மூலமாக பலருக்கான உயிர்க் காற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளோம் என்னும் பெருமிதம் குழந்தைகளாகிய உங்களுக்குள் ஏற்பட வேண்டும். இன்றோடு நின்று விடாமல் தொடர்ந்து, உங்கள் வீடுகள், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் நீங்கள் மரம் நட வேண்டும். அதற்கான மரக்கன்றுகளை பண்ணாரி ரூரல் பவுண்டேசன் அலுவலகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.



சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் பேசியதாவது: அப்துல் கலாம்,80வது பிறந்த நாளை கோவையில் எங்களோடு கொண்டாட ஒப்புக் கொண்டார். அந்த மாமனிதருக்கு உன்னதமான பரிசு தரவேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவாகவே, ஒரு லட்சம் மரங்கள் கொண்ட பசுமைப் போர்வையை பரிசளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவானது. ஒரு லட்சம் மரங்கள் நட ஓர் ஆண்டு தேவையா? ஒரே நாளில் நட முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். இது தனி மனித அல்லது ஒரு அமைப்பு சார்ந்த சாதனையல்ல. சமூகத்தின் நன்மைக்கான, நம் தலைமுறைகளின் வாழ்வுக்கான உயர்ந்த லட்சியம். இதில், ஒரு லட்சம் மக்களையாவது பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். எனவே, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள், என பல தரப்பிலும் ஆதரவு திரட்டினோம். இன்று இந்தப் பணிக்காக கூடும் கூட்டம், நாளை குறித்த நம்பிக்கையை எங்களுக்குள் ஏற்படுத்துகிறது. மரங்கள், மனிதனின் உடலுக்கு வெளியில் இருக்கும் நுரையீரல்கள். அவை சரியாக இயங்காவிட்டால் நம் உடலும் இயங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறுதுளியின் பக்க பலமே உங்களைப் போன்ற மாணவர்கள்தான். நீங்கள், இப்போது மரம் நட்டது மட்டும் போதாது; சிறுதுளிக்காக, நமக்காக, நம் சமூகத்துக்காக ஒவ்வொருவரும் ஆளுக்கு 3 வீதம் குறைந்தது 5000 மரக்கன்றுகளை உருவாக்கிக் கொடுங்கள். அந்த மரக்கன்றுகளிடம் 'கன்றுகளே, நீங்கள் இந்த சமூகத்துக்குப் பயன்படப் போகிறீர்கள். உங்களை நான் விரும்புகிறேன்' என்று பேசுங்கள்; அப்போது அதன் வளர்ச்சி அதிகரிப்பதை நீங்கள் பார்க்க முடியும், என்றார். பண்ணாரி ரூரல் பவுண்டேசன் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், ராக் செயலாளர் ரவீந்திரன், புது வடவள்ளி ஊராட்சித் தலைவர் ரங்கன் உள்ளிட்டோர் பேசினர்.



- நமது நிருபர் -








      Dinamalar
      Follow us