"பாரதம் அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி": கவர்னர் ரவி பேச்சு
"பாரதம் அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி": கவர்னர் ரவி பேச்சு
ADDED : பிப் 10, 2024 04:55 PM

திருச்சி: '' பாரதம் என்பது சாதாரணமானது ஒன்றும் அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
திருச்சி, திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு விழாவில், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராக மகதேசிக சுவாமிகள், தமிழக கவர்னர் ரவி ஆகியோர் பங்கேற்று, வெள்ளி விழா மலரை வெளியிட்டனர்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மக்கள் தொகை நிறைந்த நாடாக மட்டுமே இருந்தது. தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு, நம் நாடு தீர்வை கொடுக்குமா? என்று பல நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.
பாரதம்
இயற்கை பேரிடர்கள், கொரோனோ பரவல் மற்றும் பல நாடுகளுக்கு இடையே போர் போன்ற நெருக்கடியான நிலைகளை பார்க்க முடிகிறது. பொருளாதார ரீதியாக உயர்வாக உள்ள நாட்டையும், ஏழ்மையான சூழல் உள்ள நாட்டையும் பார்க்க முடிகிறது. அதே போல், ராணுவப்படை பலம் அதிகம் உள்ள நாட்டையும், படை பலம் குறைவாக உள்ள நாட்டையும் பார்க்கிறோம்.
தெய்வ குடும்பம்
ஆனால், கண்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து நம் நாட்டில், ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டி இருக்கிறோம். பாரதம் என்பது சாதாரணமானது ஒன்றும் அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது. அதனால், தெய்வ குடும்பம் என்று போற்றப்படுகிறது. 2030க்குள் 50 சதவீத இயற்கை எரிசக்தியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.