''திராவிட கட்சிகளின் தோளில் ஏறாமல் வளர்கிறது பா.ஜ.,'': அண்ணாமலை பேட்டி
''திராவிட கட்சிகளின் தோளில் ஏறாமல் வளர்கிறது பா.ஜ.,'': அண்ணாமலை பேட்டி
UPDATED : ஜூன் 05, 2024 05:18 PM
ADDED : ஜூன் 05, 2024 05:06 PM

சென்னை: இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., ஓட்டுகளை பெற்றுள்ளதாகவும், திராவிட கட்சிகளின் தோளில் ஏறாமல் பா.ஜ., வளர்வதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., கட்சி வளர்ந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்கள் எம்.பி.,க்களை பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும் என இலக்கு வைத்திருந்தோம். அதனை அடைய முடியாதது வருத்தம். எங்களுக்கு ஓட்டு சதவீதத்தை அதிகரித்து தர வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் தீர்ப்பை பா.ஜ., தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது.
இண்டியா கூட்டணி
தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெற்ற இண்டியா கூட்டணிக்கு வாழ்த்துகள். பிரதமரின் நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர பா.ஜ., முழு ஒத்துழைப்பு அளிக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. கோவையில் நான் பெற்ற 4 லட்சம் ஓட்டுகளும் பணம் கொடுக்காமல் பெற்றவை. வரும்காலத்தில் இன்னும் கடினமாக உழைத்து வெற்றி பெறுவோம். திராவிட கட்சிகளின் தோளில் நிற்காமல் பா.ஜ., வளர்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் 33 சதவீத ஓட்டுகளை பெற்ற திமுக.,வுக்கு இந்த முறை 6 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. அப்படியிருக்கையில் வெற்றிப்பெற்றது போல கொண்டாடுகின்றனர். 5 முறை ஆட்சியில் இருந்த கட்சியை கூட டெபாசிட் இழக்க செய்தது பா.ஜ., தான். 3 முனை போட்டி, 2 முனை போட்டியாக மாறியதால் தான் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. 2 முனை போட்டியாக இருந்தால் தான் இலக்கை அடைய முடியும்.
நாவடக்கம்
என்னிடம் நாவடக்கம் என்று சொல்பவர்கள் நாவடக்கத்துடன் பேசியிருக்க வேண்டும். அதிமுக 3வது இடம் பிடித்தது, நாவடக்கத்துடன் பேசாததற்கு மக்கள் கொடுத்த பரிசு. 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிப்பதே எங்கள் இலக்கு. அப்போது கூட்டணி ஆட்சி அமையும் என்பது என் கணிப்பு. எனக்கான வேலை பா.ஜ.,வை வளர்ப்பதே தவிர, மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது அல்ல. இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியை தக்க வைத்ததே சாதனைதான். உலகளவில் கொரோனாவுக்கு பிறகு வேறு எந்த அரசும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவில்லை.
அரசியல் ரீதியாக எதிர் சித்தாந்தம் கொண்டிருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும் பாராட்டுகிறேன். பணம் கொடுக்காமல் அவர்கள் ஓட்டு பெற்றதற்காகவும் பாராட்டுகிறேன். கூட்டணி ஆட்சி பா.ஜ.,வுக்கு புதியது அல்ல; கூட்டணி ஆட்சியை பிரதமர் மோடி சிறப்பாக நடத்திக் காட்டுவார். கனிமொழி பா.ஜ.,வுக்கு வருவதாக இருந்தால், நான் தலைவர் பதவியில் இருந்து விலகுவது பற்றி பரிசீலிக்கிறேன். விவசாயியின் மகனான அண்ணாமலை, தேர்தலில் படிப்படியாக தான் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.