"வரலாறு புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் படிக்க வேண்டும்": அண்ணாமலை யோசனை
"வரலாறு புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் படிக்க வேண்டும்": அண்ணாமலை யோசனை
UPDATED : மார் 12, 2024 11:35 PM
ADDED : மார் 12, 2024 04:55 PM

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் போனாரா? என தெரியவில்லை. வரலாறு புத்தகத்தை அவர் நன்றாக படிக்க வேண்டும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குடியுரிமை என்பது பிறப்பு மற்றும் வழித்தோன்றல் ஆகிய 2 தேவைகளை பூர்த்தி செய்யும். தமிழகத்தில் வழக்கம் போல அரசியல் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி தெரியாமல் பேசுகிறார்கள்;
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பு ஏற்படாது. இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டமும் இது இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. குடியுரிமை கொடுப்பதற்கான சட்டம் தான், குடியுரிமைகளை எடுப்பதற்கான சட்டம் அல்ல.
முதல்வரை சாடிய அண்ணாமலை
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். சி.ஏ.ஏ., சட்டத்தை நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?. முதல்வருக்கு எந்தளவு அரசியல் சட்டம் தெரிந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் போனாரா? என தெரியவில்லை. வரலாறு புத்தக்கத்தை அவர் நன்றாக படிக்க வேண்டும்.முதல்வராக எதிர்க்கிறேன் என்றால் சரி. தமிழகத்துக்குள் விட மாட்டேன் என்று சொல்ல அவருக்கு அதிகாரம் கிடையாது.
மத்திய அரசுக்கு மட்டும் தான்
இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு தமிழகத்தில் குடியுரிமை கொடுத்துள்ளனர். 14 ஆண்டுகளாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டுள்ளது. குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் யாருக்கு எதிரானது என்பதை தமிழக கட்சிகள் கூற வேண்டும். அகதிகளாக வருபவர்கள் இந்தியாவில் தங்கி இருக்கலாம். அவர்கள் நாட்டில் பிரச்னை முடிந்ததும் திருப்பி அனுப்பப்படுவர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

