"அண்ணன் வெளியே, தம்பி உள்ளே' குண்டர் சட்டத்தில் அதிரடி கைது
"அண்ணன் வெளியே, தம்பி உள்ளே' குண்டர் சட்டத்தில் அதிரடி கைது
ADDED : ஆக 03, 2011 01:28 AM
திருச்சி : அந்தநல்லூர் தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட தி.மு.க., துணை செயலராக இருப்பவர், குடமுருட்டி சேகர்.
இவர் மீது, எஸ்.ஐ.,யை வெட்டியது, காரில் கஞ்சா கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில், திருச்சி மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே சில புகார்கள் நிலுவையில் இருந்ததால், புதிய புகார்களுடன் சேர்ந்து, குடமுருட்டி சேகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் இருந்த சேகர், 'என்னை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது' என, சென்னையில் உள்ள நீதி ஆலோசனைக் குழுவில் முறையீடு செய்தார்.முறையீட்டை விசாரித்த நீதி ஆலோசனைக்குழு, 'தி.மு.க., மாவட்ட துணை செயலர் சேகரை, குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது' என தீர்ப்பளித்தது; கடந்த சனிக்கிழமை, சிறையிலிருந்து வெளியே வந்தார்.
குடமுருட்டி சேகர் போலவே, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள, அவரது தம்பி குடமுருட்டி ஆறுமுகத்தை, 35, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, நேற்று உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் குடமுருட்டி ஆறுமுகம், இடமோசடி வழக்கில் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் உள்ளார். குண்டர் சட்டம் பாய்ந்துள்ள குடமுருட்டி ஆறுமுகம் மீது, தில்லைநகர் போலீஸ் ஸ்டேஷனில், பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து மிரட்டிய வழக்கும், கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் இடத்தை அபகரித்த மற்றும் வீட்டை காலிசெய்ய கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள், நிலுவையில் உள்ளன.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள குடமுருட்டி ஆறுமுகமும், அவரது அண்ணன் சேகரும், 2007ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தி.மு.க., மாவட்ட துணை செயலரான அண்ணன், குண்டர் சட்டத்தை உடைத்து வெளியே வந்த சில நாட்களில், அவரது தம்பி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது, திருச்சி மாவட்ட தி.மு.க.,வினர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'குண்டாஸ்' கூடாரமான திருச்சி மத்திய சிறை: திருச்சி மாநகர போலீசால், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தி.மு.க., பிரமுகர்கள் குடமுருட்டி சேகர், காஜாமலை விஜய், குடமுருட்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும், திருச்சி மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த எஸ்ஸார் கோபி, அட்டாக் பாண்டி ஆகியோரும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.