"கூட்டணி சேர்த்து சண்டைக்கு வருவது கோழை": சீறுகிறார் சீமான்
"கூட்டணி சேர்த்து சண்டைக்கு வருவது கோழை": சீறுகிறார் சீமான்
ADDED : ஏப் 02, 2024 03:22 PM

சென்னை: தேர்தலில் கூட்டணி சேர்த்து சண்டைக்கு வருவது கோழை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடும் கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் டாக்டர் கருப்பையாவை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: கூட்டணி சேர்த்து சண்டைக்கு வருவது கோழை. பல தேர்தல்கள் நடந்து இருக்கிறது. நாங்கள் குறை கேட்க வந்த பிள்ளைகள் அல்ல, உங்கள் குறை தீர்க்க வந்த பிள்ளைகள்.
தமிழ் மொழியை காக்க வேண்டும், தமிழர் உரிமை மீட்கப்பட வேண்டும். தமிழர் நிலம், வளம் இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அதைப் பற்றிக் கவலைப்படுவதற்கான அரசு இல்லை.
கேரளாவின் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுகின்றனர். இந்தியாவின் குப்பை மேடாக தமிழகம் மாறிவிட்டது. மருத்துவக் கழிவுகளை திட்டமிட்டு கேரள அரசு கொட்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கின்றது. எந்த நாட்டில் வாத்தியாருக்கு மரியாதை இருக்கிறதோ, அந்த நாடு அறிவார்ந்த சமூகமாக இருக்கும்.
ஆயிரம் ரூபாயை கொடுப்பதை சாதனையாக தி.மு.க., சொல்கிறது. ஆயிரம் ரூபாயை அவர் அப்பா மோர் விற்று, நெல், மிளகாய் விற்று சிறுக சிறுக சேர்த்துக் கொடுத்த காசா?. எங்கள் காசை திருப்பிக் கொடுப்பது எல்லாம் சாதனையா?
தி.மு.க., அ.தி.மு.க.,வும் எவ்வளவோ பெரிய கட்சிகள். ஏன் 50 பேருடன் கூட்டணி வைக்க வேண்டும். பெரிய ரவுடி என்றால் தனியாக வர வேண்டியதுதானே. ஓட்டுக்கு ஒரு பைசா தர மாட்டோம் என தி.மு.க., சத்தியம் செய்யுமா. அப்புறம் என்ன பெரிய கட்சி. தேர்தலில் கூட்டணி சேர்த்து சண்டைக்கு வருவது கோழை. தமிழகத்தில் ஒரே பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் தான். இவ்வாறு சீமான் பேசினார்.

