"தமிழக இளைஞர் வளத்தை கூறி முதலீடுகளை ஈர்ப்போம்": முதல்வர் ஸ்டாலின்
"தமிழக இளைஞர் வளத்தை கூறி முதலீடுகளை ஈர்ப்போம்": முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜன 29, 2024 02:12 PM

பிரான்ஸ்: தமிழகத்தில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்க உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை, 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது ஜோக்கோவிச் உடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பயணம் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்பெயின் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம். ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.
இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழகத்தில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.