''வாருங்கள் வலிமையாவோம்'': அதிமுக.,வினருக்கு திமுக அமைச்சர் அழைப்பு
''வாருங்கள் வலிமையாவோம்'': அதிமுக.,வினருக்கு திமுக அமைச்சர் அழைப்பு
ADDED : ஜூலை 11, 2024 03:57 PM

சென்னை: 'உண்மையான அதிமுக தொண்டர்கள் வந்தால் திமுக இரண்டு மடங்கு வலிமையாகிவிடும் என அதிமுக.,வினர் திமுக.,வில் சேர அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. அக்கட்சியின் ஓட்டு சதவீதம் கடந்த லோக்சபா தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்திருந்தாலும், பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறியது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அதிமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களால் கணிசமான ஓட்டுகள் பா.ஜ., கூட்டணிக்கு சென்றுவிட்டதாகவும் கருதப்படுகிறது.
இதனால் அதிமுக.,வை ஒருங்கிணைப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியானது. சிலர் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார்.
திமுக.,வை சேர்ந்த அமைச்சர் ரகுபதி கூறுகையில், ''கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகளே இ.பி.எஸ்.,க்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளனர். நிர்வாகிகள் இபிஎஸ்.,க்கு நெருக்கடி கொடுப்பதால் அதிமுக தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்கள் வந்தால் திமுக இரண்டு மடங்கு வலிமையாகிவிடும்'' என அதிமுக.,வினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.